ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

எனது தமிழர்களின் கலாச்சார அருமை மற்றும் பெருமை.


எனது தமிழர்களின் கலாச்சார அருமை தன்னை சேர்ந்தவர்களுக்கு உதவுவது தான். ஒரு சிறந்த உதாரணம் அரசு எங்களுக்கு உதவும் சலுகைகள். இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே எந்த ஒரு அரசாங்கம் செய்யாத செயல்களை தமிழ்நாட்டு அரசாங்கம் கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் நாட்டு மக்களுக்கு பணியாற்றி வருகிறது.என் அறிவு தமிழர்களுக்கும் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் மிக்க நன்றி! இன்று தமிழ்நாட்டில் வாழும் வேலை உள்ள மற்றும் வேலை இல்லாத தமிழ்நாட்டு தமிழர்கள், அமெரிக்க குடி மகன்கள் வேலையிலந்தால் பெரும் சலுகையைவிட பன் மடங்கு சலுகையை அடைந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் நான் மதிக்கும் தமிழக அரசும், தமிழர்களின் மிகச்சிறந்த கலாச்சாரமும் தான். அப்படி உயர்ந்த கலாச்சாரத்தை இங்கே விவரிகின்றேன்.

1.நாங்கள் வாழ்வது எங்களுக்காக அல்ல, எங்கள் கும்பத்திற்காக!. சுமார் நாற்பது தலைமுறைக்கு தேவையான சொத்தை இந்த ஒரு பிறவியில் சேர்ப்பது.அதற்காக கையூட்டு, வரதட்சணை பெற போராடி வெற்றியா பெறுவோம்?. இது எங்கள் வீரமும் கூட! தமிழக தமிழன் தலைவணகுவதில்லை!. உதாரணமாக எங்கள் ஊர் பிரசிடென்ட் எட்டாம் வகுப்பு படித்தவர். எதோ ஒரு கழகத்தில் சேரும் முன் ஆடு தான் மேய்த்தார்.கடந்த பத்து வருடங்களாக கழகத்தில் பணியாற்றி, இரு வருடங்களுக்கு முன் பிரசிடென்ட் ஆகா என்னை போன்ற தமிழ் அறிவாளிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பல கோடிகளுக்கு அதிபதி. நாற்பது தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்தாகிவிட்டது.

2.சில ஆயிரம் ரூபா நோட்டோ, ஒரு பிரியாணி பொட்டலமோ , குவாடெர் பாட்டிலோ எங்கள் தலைவிதியை தீர்மானிக்கும்.

3.கோயில் இல்லா ஊர் தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் டாஸ்மாக் இல்லா ஊர் இல்லை தமிழகத்தில்.

4.கலைதான் எங்கள் மூச்சு. அடுத்த நாற்பது மில்லியன் வருடங்களுக்கு கோடம்பாக்க கலை ஊழியர் தான் எங்கள் முதல்வர். அவர் நமீதாவாகவும் இருக்கலாம், லைட் மேன் ஆகவும் இருக்கலாம். மேற் கூறிய பொருளாதார, பொறியியல் வல்லுனர்களை முதல்வர்களாக வளர்க்கும் பெருமை என் தமிழர்கள், தமிழ் கலாச்சாரம்.

5.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை மிகக்கடுமையாக பின்பற்றி வருகிறது தமிழகம். உதாரணமாக செய்திதாளில் தினமும் கள்ள தொடர்பு மற்றும் கள்ள தொடர்பு காரணமாக கணவனோ அல்லது மனைவியோ கொலை செய்ய பட்டார்கள் என்று செய்தி வருகிறது. ஆனால் செய்திதாளில் வரும் செய்தியால் நாங்கள் மாறிவிடவில்லை. ஏனெனில் தினமும் அது போல் செய்தி வருவது நிற்கவில்லை.

6.எங்கள் மொழி பேசும் தமிழர்களை நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. உதாரணமாக ஈழ தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கடந்த யுத்தத்தில் இறந்தனர். அவர்களுக்காக போரை நிறுத்த எந்த ஒரு பெரிய காரியமும் செய்யாமலும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமலும் வேடிக்கை பார்த்தோம்,பார்க்கின்றோம், இனிமேலும் பார்ப்போம்.இதுவே எங்களின் மிகபெரிய தியாகம்.

மேற்சொன்ன எடுத்துகாட்டுகள் எங்கள் உழைப்பு, அடிபணியாமை, அறிவுத்திறமை, சமூகத்தின் சாரம் மற்றும் மனித நேயம் ஆகியவற்றை உரைக்கும். மேலும் பல ஊர் போற்றும் தமிழக கலாச்சாரங்கள் உள்ளன. இன்னும் தலை சிறந்த கலாச்சாரங்கள், அரசின் சலுகைகளை அடுத்த இடுகையில் விவரிக்க உள்ளேன். நன்றி!!! வணக்கம்!!!


2 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே

    உங்களின் தார்மீக கோபகங்கள், ஆதங்கம், கருத்துக்கள் அத்தனையும் படித்தேன். ஆனால் உங்கள் கருத்துக்களை வரிகளை பிடித்த அளவிற்கு பல மடங்கு உங்கள் இடுகையின் தலைப்பு வியப்பாக ஆச்சரியமாக, அதிசயமாக, சரியாக இருந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன். ஒன்று மட்டும். முடிந்தால் அந்த ஆங்கில எழுத்துக்களை தமிழ் எழுத்தாக மாற்றி விட முடியுமா?

    உள்வாங்கிய கருத்து உன்னதமானது. படைத்த கருத்து உங்களின் பக்குவத்தை உணர்த்தியது. வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  2. ஜோதிஜி அவர்களே! தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. இனி கலப்படம் இல்லா தமிழில் இடுகை இடுவேன். பிழைப்புக்காக பயின்ற ஆங்கிலம் என் இடுகையில் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு