திங்கள், 23 நவம்பர், 2009

சினிமா பைத்தியம்

சினிமா பைத்தியம்...... நான் தான்(ஒரு காலத்தில்). நான் என்னுடைய சிறு வயதில் எங்கடா சினிமா போடுவார்கள் என்று திரிந்த காலங்கள் பற்றி நினைத்து இடும் இடுகை.
என்னுடைய எட்டாவது வயது முதல் ஏதாவது கல்யாண வீடு, கோயில் திருவிழா என்றால் உடனே அங்கு சினிமா பார்க்க சென்று விடுவேன். அந்த நேரங்களில் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று சினிமாக்கள் போடுவார்கள். கல்யாண வீடு என்றால் 'டெக்' எடுத்து போடுவார்கள். கோயில் திருவிழா என்றால் திரை கட்டி போடுவார்கள். அப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள் இதோ:
நல்ல தம்பி, ஒரு கைதியின் டயரி.
சின்னவீடு, மிஸ்டர் பாரத்
வைஜயந்தி ஐ பி ஸ், இது தாண்ட போலீஸ்
மனிதன், வெற்றிவிழா
ஆயரத்தில் ஒருவன்,கரகாட்டகாரன்
சின்ன தம்பி பெரிய தம்பி, பூந்தோட்ட காவல்காரன்
மிஸ்டர் கார்த்திக், பூ பூ வா பூத்திருக்கு
இந்திரன் சந்திரன், பொன் மனச்செல்வன்
அபூர்வ சகோதரர்கள், மாப்பிளை
புதியபாதை, பொண்டாட்டி தேவை
.
.
. இன்னும் பல.
மேற்கூரிய சினிமாக்கள் யாவும் என் பள்ளி நாட்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள்.

இப்படி சினிமா பார்த்ததால் என் பொறியியல் வல்லுநர் ஆகும் கனவு கலைந்தது.
பிளஸ் டூ வில் பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுத்தும் என் இன்ஜினியரிங் சீட்டை கோட்டை விட்டேன்.

இதே போல் என் இளங்கலை கல்லூரி நாட்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான் பார்த்த இரண்டு படங்கள் அனைத்தும் திரை அரங்கு சென்று பார்த்தவை. அவைகளின் பட்டியல் இதோ:

மக்கள் ஆட்சி, குருதிப்புனல்
ரசிகன், சீவலபேரி பாண்டி
காதலன், பாட்சா
நாட்டாமை, பூவே உனக்காக
hum aapke hain kaun, hum aapke hain kaun
.
.
இன்னும் பல.

இப்படி சினிமா பார்த்ததால் என்னால் கஷ்டப்பட்டு அறுபத்து இரண்டு சதவீதம் மட்டுமே எடுக்க முடிந்தது.இரண்டு மணிநேர சினிமா பார்த்து ஐந்து மணிநேரம் பார்த்த படத்தை பற்றி கல்லூரி மாணவர் விடுதியில் பேசியுள்ளேன்.அதற்காக "வெட்டி பல்ஸ்" என்ற பட்டமும் எனக்கு என் கல்லூரி நண்பர்களால் கிடைத்தது.

ஆனால் என்னுடைய முதுகலை படிப்பின் போது என்னை வழி நடத்தி சென்றது விவேகானந்தரும்,ஓஷோவும் தான். விவேகானந்தரின் ராஜயோகம்,பக்தியோகம், கர்மயோகம் மற்றும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு என்னை சிந்திக்க வைத்தது. அதனால் வாரம் ஒரு படம் பார்ப்பது என்று முடிவெடுத்து வாரத்துக்கு ஒரு சினிமா என்று பார்த்தேன்.என்னுடைய முதுகலையில் எழுபத்து நான்கு சதவீதம் எடுத்து தேற்சி பெற்றேன்.

விவேகானந்தர் கூறிய "வாழ்க்கை கொடுக்கும் அடிகள் தான் மனிதனின் முன்னேற்றத்தை தரும்" என்ற பொன் மொழிக்கு ஏற்ப சென்னை வந்து வேலை தேடும் போதும், வேலை கிடைத்த பின்னும், வடபழனியில் வாசித்த போதும், சினிமாகாரர்களை நேரில் பார்த்த போதும், சினிமாதுறை சம்பந்த பட்டவர்கள் வீட்டில் குடியிருந்த போதும், சினிமா சூட்டிங் பார்க்க நேரம் கிடைத்தாலும் சினிமா பற்றி, சினிமா பார்ப்பது பற்றி வாழ்க்கை கொடுத்த அடிகளால் எந்த சிந்தனையும் எழவில்லை. வாழ்க்கை கொடுத்த அடி சினிமா பற்றி சிந்திப்பதை நிறுத்தியது.

இன்று என் மனம் சொல்கிறது "சினிமா ஒரு தொழிற்சாலை அதில் நான் தற்போது கணினி பணி புரிவது போல் அங்கு பலர் வேலை செய்கிறார்கள். அதை திரை அரங்கு சென்று ஒருமுறை பார்த்தால் போதும். எல்லா தொழிலும் நடப்பது போல் இந்த தொழிலிலும் உழைக்கிறவர்களுக்கு சிறிய அளவில் கூலியும், மேனா மினிக்கிகளுக்கு அதிக கூலியும் கிடைக்கும். ஆனால் இந்த தொழிலில் ஜெயிச்ச முதலாளிகள் கொஞ்ச பேர்தான்"

எது எப்படியோ சினிமா பைத்தியங்களுக்கு வாழ்க்கை சரியான நேரத்தில் தன் அடியை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக